கேரள கெடுபிடியுடன் கண்ணகி கோயில் விழா!
கூடலுார்: கேரள வனத்துறையின் வழக்கமான கெடுபிடிகளுடன், தமிழக -கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக - கேரள எல்லை வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஆண்டுதோறும் கண்ணகியை கோவலன் வானுலகிற்கு அழைத்துச் சென்ற தினமான சித்ரா பவுர்ணமியன்று விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று கொண்டாடப்பட்டது.
கேரள வனப்பகுதி வழி: இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கேரள மாநிலம் குமுளியில் இருந்து வனப்பகுதி வழியாக வழக்கமான கெடுபிடியுடன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குமுளியில் இருந்து 14 கி.மீ., துாரமுள்ள கோயிலுக்கு ஜீப்பிலும், நடந்தும் பக்தர்கள் சென்றனர். கொக்கரக்கண்டம் அருகே பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக் பைகள், கேன்கள்
பறிமுதல் செய்தனர். ஜீப் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி கேரள வனத்துறை மூலம் செய்து தரப்பட்டிருந்தது. ஆபத்தான வளைவுகள் உள்ள பாதையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள், இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து வழிபட்டனர். கண்ணகி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோயிலில் தமிழக பூஜாரி சபரிநாதன் அர்ச்சனை செய்தார். காலையில் அம்மனுக்கு மலர் வழிபாடு, யாகபூஜை நடந்தது. பெண்களுக்கு மங்கல நாண், வளையல் தரப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும் பூமாரி விழாவும் நடந்தது.மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், கும்பம் இட்டு யாக பூஜை நடத்தினர். குடந்தை தமிழ்ச்சங்கம் சார்பில், சிலப்பதிகார பாடல்கள் பாடப்பட்டன.
பளியன்குடி வழி: பளியன்குடி வனப்பகுதி வழியாக, தமிழக பக்தர்கள் கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் நடந்து வந்தனர். அவர்களுக்கு கண்ணகி அறக்கட்டளை சார்பில், 5 லிட்டர் கேனில் தண்ணீர் வழங்கப்பட்டது. சித்தா மருத்துவ பிரிவு சார்பில் டாக்டர் சிராஜூதீன் தலைமையில் நிலவேம்பு கஷாயம் மற்றும் வலி நிவாரணி தைலம் வழங்கப்பட்டது. கூடலுார் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் எலுமிச்சை சாறு மற்றும் பழ வகைகள் வழங்கினர். பாதயாத்திரை பக்தர்களுக்கு கால்வலியைப் போக்கும் வகையில் வர்மம் பெயின் கியூர் சென்டர் சார்பில் மசாஜ் செய்தனர். கூடலுாரில் இருந்து பளியன்குடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மருத்துவ துறை சார்பில், பளியன்குடியிலும், கோயிலிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 3 மணிக்குப்பின் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல்: *ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.,, பீர்மேடு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அப்துல்காதர், பீர்மேடு தொகுதி கம்யூ.,வேட்பாளர் பிஜூமோள் கோயிலுக்கு வந்திருந்தனர். *தேனி கலெக்டர் வெங்கடாசலத்துடன், கம்பம் மற்றும் போடி தேர்தல் செலவினப் பார்வையாளர் பிரசாந்த்குமார் வந்திருந்தார்.*குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவாறு இருந்தது. ஜீப் சென்ற போது வெளியேறிய துாசி அதிகமாக இருந்ததால் நடந்து சென்றவர்கள் சிரமம் அடைந்தனர்.
* மதுரை, நாகப்பட்டினத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர்.* தமிழக பக்தர்கள் பொங்கல் வைக்க கெடுபிடி செய்த கேரள வனத்துறை, கோயில் வளாகத்தில் கேரளா தரப்பில் மெகாசைஸ் பானையில் பொங்கல் வைத்ததை கண்டுகொள்ளவே இல்லை.*விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் நாகராஜ் மற்றும் ஈரோடு கொங்கு இளைஞர் பேரவை, சேலம் திருத்தொண்டர் பேரவை ஆகியவற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.