உஜ்ஜைனில் கும்பமேளா கோலாகலமாக துவங்கியது!
உஜ்ஜைன்: மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில், கும்பமேளா கோலாகலமாக துவங்கியது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில், பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. முக்கிய, 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில், இதுவும் ஒன்று. அங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ஹஸ்த கும்பமேளா நடைபெறுகிறது. இதையொட்டி, அங்குள்ள ஷிப்ரா ஆற்றில், மக்கள் புனித நீராடுவர். கும்பமேளா துவங்கியதையடுத்து, புனித நீராடுவதற்காக, லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ஒரு மாதம் வரை நடைபெறும் இந்த கும்பமேளாவில், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முக்கிய மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், சன்னியாசிகளும் குவிந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், முதல் நாளிலேயே நீராடினர். இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், பசுமை கும்பமேளாவாக நடைபெறும். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளன. சிரமமின்றி மக்கள் புனித நீராடுவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றார்.