உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் வெப்பம் தணிக்க சிறப்பு ஏற்பாடு!

திருமலையில் வெப்பம் தணிக்க சிறப்பு ஏற்பாடு!

திருப்பதி: திருமலையில், மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி விடுமுறை காலம் என்பதால், கோடையில், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அக்னி நட்சத்திரத்தின் போது, அதிகபட்சம், 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இந்நிலையில், ஏப்., 23ல், 37 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானது. கடந்த, மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மாட வீதிகளில் செல்ல, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மதிய நேரங்களில், கோவில் சுற்றுப் பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. மே மாதம், இங்கு, 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், தேவஸ்தானத்தின் சார்பில், நிழற்பந்தல் அமைத்து, குடிநீர், மோர் வழங்கப்படுகிறது. சிவப்பு கம்பளம் விரித்து, அதன் மீது நீர் தெளிக்கப்படுகிறது. வெப்பத் தாக்கத்தால், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, 3 மணி நேரத்திற்குள், தரிசனம் கிடைக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !