உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார் அழகர்!

மதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார் அழகர்!

மதுரை: மதுரைக்கு வந்து வைகையில் இறங்கி, மண்டூருக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லருள் புரிந்த அழகர் பெருமாள், மக்களை மயக்கிய அந்த மாலவன், அந்த மாயக்கண்ணன் இன்று காலை தல்லாகுளத்திலுள்ள கருப்பண்ண சுவாமி கோவிலில் இருந்து அழகர்மலைக்கு புறப்பட்டார்.

பக்தர்களெல்லாம், பிரியாவிடை கொடுத்து அழகரை வழி அனுப்பினர். நம் வீட்டு பிள்ளை விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டு, ஊருக்கு திரும்பும் போது உள்ளத்தில் ஏதோ ஏக்கம் பிறக்கும். அப்படிப்பட்ட ஏக்கத்துடன், “அடுத்த சித்திரை இப்போதே வந்து விடாதா...அழகா, நீ இங்கேயே எங்களுடன் தங்கி விடமாட்டாயா!’ என்று ஒவ்வொரு பக்தனின் உள்ளத்தையும் அந்த ஏக்க உணர்வு பிசையும். இப்படி ஒரு சூழ்நிலையில், தன்னை வாசலிலேயே இருந்து பாதுகாக்கும் கருப்பண்ண சுவாமியின் கோவிலுக்கு வந்து, அவரை சந்தித்து விட்டு அழகர் இன்று கிளம்பினார்ர். மாரியம்மன் கோவில் அவுட்போஸ்ட், அம்பலக்காரர் மண்டபம், மூன்றுமாவடி, சுந்தரராஜன்பட்டி சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபம் ஆகிய இடங்களில் எல்லாம் பக்தர்களை சந்தித்து விட்டு, அழகர் பெருமான் நாளை மதியத்திற்குள் தன் இருப்பிடத்தை அடைகிறார். 27ம் தேதி அவருக்கு உற்சவ சாந்தி செய்யப்படும். அடுத்த ஆண்டிலும் எங்களுக்கு இதே போல் மகிழ்ச்சி தர ’அழகா வா...’ என இப்போதே அழைப்பு விடுத்து விடை பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !