உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா

உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா

கீழக்கரை: உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்பு பெற்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடந்தது. இரண்டாம் ஆண்டு தெப்பத்திருவிழாவில் 40 அடி உயரம் கொண்ட தெப்பத்தில், மாலை 5 மணியளவில் ராஜமரியாதையுடன் மூலவரை வரவேற்கும் அனுக்ஞை பூஜை நடந்தது. பின்னர், பிரியாவிடையுடன் மங்களநாயகி சமேதராக மங்களநாத சுவாமி சயனக்கோலத்தில் அக்னி தீர்த்தக் குளம் தெப்பத்தில் இரவு 7 மணிக்கு எழுந்தருளினார். வேத பாராயணம், கைலாச வாத்தியங்கள், மாணிக்கவாசகர் பாடி அருளிய திருபொன்னுஞ்சல் பாடப்பட்டது. 11 முறை சுற்றுக்களில் அக்னி தீர்த்தக்குளத்தில் தெப்பம் வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் நாகராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பக்தர்கள் சிரமம்: சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்கள் சிரமப்பட்டனர். தெப்பம் மின்னொளியில் ஜொலித்தாலும், அக்னி தெப்பக்குளத்தின் நான்கு புறமும் இருள் சூழ்ந்திருந்தது. உள்ளூர் மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். வெளியூர் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !