வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து வழிபாடு!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வமுத்துக்குமார சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் இரண்டாவது செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக, சிவகங்கை, செட்டிநாடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருகைபுரிவது வழக்கம். இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 3லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோ யில் நிர்வாகம் சார்பில் வைத்தீஸ்வரன்கோயில் ஊர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து அவர்கள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டு வந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தனர்.