கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்: திருஷ்டி சுற்றி வரவேற்பு!
அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை வைகை ஆற்றில் இறங்கி விட்டு நேற்று காலை அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் மலர் துாவியும், பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றியும் வரவேற்றனர்.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 18ல் துவங்கியது.மதுரைக்கு புறப்பட்டார்: விழா முக்கிய நிகழ்வான மதுரை வைகை ஆற்றில்இறங்க ஏப்., 20 ல் மாலை 5.00 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் நேரிக்கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.
ஏப்., 21ல் மதுரை சென்ற கள்ளழகரை மூன்றுமாவடி, அவுட்போஸ்ட் பகுதிகளில் பக்தர்கள் எதிர்சேவை செய்தனர். ஏப்., 22ல் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், காலை 6.05 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.மலைக்கு திரும்பினார்: பக்தர்களின் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல நிகழ்ச்சிகளில் கள்ளழகர் அருள்பாலித்தார். அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை 10.30 மணிக்கு கோயிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் மலர்கள் துாவி கோவிந்தா கோஷம் முழங்க வரவேற்றனர். 18 பேர் பூசணிக்காயில் சூடம் ஏற்றி கள்ளழகரை 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். இன்று(ஏப்., 27) உற்சவசாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.