திருமறைநாதர் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக மாங்கொட்டை திருவிழா மே 16 ல் நடக்கிறது. நேற்று காலை அம்மன், சுவாமி கோயிலை வலம் வந்து அருள் பாலித்தனர். பிறகு கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மே 16ல் மேலுாரில் எழுந்தருள்கின்றனர். இது மாங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மே 19ல் திருக்கல்யாணம், மே 20ல் தேரோட்டம் நடக்கிறது.
புராண வரலாறு: மேலுாரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. தாசில்தார் மேலுாரில் சிவலிங்கம் அமைத்து கொடுத்தும் திருவாதவூர் செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. சிவன், அவரது கனவில் தோன்றி, நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன்படி சிவன் அங்கு எழுந்தருள்வதாக புராண வரலாறு. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன், பேஷ்கார் பகவதி செய்துள்ளனர்.