உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மூன்று யானைகள் வெளியேற்றம்

காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மூன்று யானைகள் வெளியேற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த, மூன்று யானைகள் சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில், மடத்திற்கு சொந்தமான சந்தியா என்ற காமாட்சி, 40, இந்துமதி என்ற அப்பு, 35, ஜெயந்தி, 18, ஆகிய மூன்று யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. குணசீலன் என்பவர் பராமரித்து வந்தார். கடந்த ஆண்டு அவர், உடல் நல குறைவால் இறந்து விட்டார். அதன் பின் அவரது மனைவி, மகள் ஆகியோர் யானையை பராமரித்து வந்தனர்.இந்த யானைகள், கோவில் பிரம்மோற்சவம் காலங்களில் சுவாமிக்கு முன் ஊர்வலமாக செல்லக்கூடியவை.

காமாட்சி என்ற யானைக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் உடலில் புண் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையும் அவ்வப்போது அளிக்கப்பட்டன; இருந்தும் குணமாகவில்லை.குட்டி யானை ஜெயந்தி, கோவிலில் நடக்கும் கோ பூஜை, கஜ பூஜைகளில் கலந்து, சாமரம் வீசும். மடத்தில் நடக்கும் சந்திரமொளி பூஜை, கஜ பூஜைகளில் கலந்து கொள்ளும். பிருந்தாவனத்தில் நடக்கும் தீபாராதனையின்போது சாமரம் வீசும் பணிகளில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், மூன்று யானைகளையும் மரக்காணம் அருகில் வைத்து சிகிச்சை அளிக்க, தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் லாரிகளில் கொண்டு சென்றுள்ளனர். இதில், சந்தியா என்ற பெரிய யானை போக மறுத்து அடம் பிடித்ததால், அடித்து லாரியில் ஏற்றியுள்ளனர். பின், கதவை உடைத்து கீழே விழுந்து விட்டது. இதனால், காஞ்சிபுரம் அடுத்த, வேடல் பகுதியில் உள்ள மடத்திற்கு சொந்தமான இடத்தில், அந்த யானை தங்க வைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு யானைகள் மரக்காணம் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு இடம் வேண்டும் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த யானைகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. யானையை பராமரித்து வரும் அன்னப்பூரணி கூறுகையில், நாங்கள் இதுவரை யானையை நல்ல முறையில் தான் பராமரித்து வருகிறோம். அதற்கான சிகிச்சை அளித்தும் வந்தோம். இருந்தும் வலுக்கட்டாயமாக யானைகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் கொண்டு செல்கின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !