வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம்!
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று துவங்கியது . ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். வீரபாண்டி கவுமாரியமன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10ம்தேதி துவங்கியது. அம்மன் அன்று மலர் விமானத்தில் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வந்தார். அடுத்தடுத்த நாட்களில் முத்து பல்லக்கிலும், புஷ்ப பல்லக்கிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரோட்டம்: முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று துவங்கியது. முன்னதாக அம்பாள் அலங்கரிக்கப்பட்டத்தேரில் எழுந்தருளினார். மாலை 5.50 மணிக்கு கலெக்டர் நாகராஜன், மகேஷ் எஸ்.பி., அறநிலைத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி அடி அம்மன் சன்னதி முன் வந்து நின்றது. இன்று மாலை தேர் இழுக்கப்படும். 16ம்தேதி நிலைக்கு வந்து சேரும்.
அம்மனுக்கு நேர்த்திகடன்: திருவிழா துவங்கிய நாள் முதல் நாளில் இருந்தே மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்தனர். முல்லை பெரியாற்றில் நீராடி அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு என நேர்த்தி கடன் செலுத்தினர். ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அம்மன் சன்னதியில் உள்ள முக்கம்பிற்கு ஊற்றினர்.