பழநியில் வைகாசி விசாகம் துவக்கம்
பழநி: வசந்தஉற்சவ விழா என அழைக்கப்படும் பழநி வைகாசி விசாக திருவிழா நாளை(மே 15ல்) கொடியேற்றத்துடன் துவங்கி துவங்கி மே 24 வரை நடக்கிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை காலை 11 மணிக்குமேல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பத்துநாள் திருவிழாவில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட, வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முக்கிய நிகழ்ச்சியாக விழாவின் ஆறாம்நாள் (மே 20ல்) மாலை 6.30 மணிக்குமேல் இரவு 7.30 மணிக்குள் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏழாம்நாள் மே 21 வைகாசி விசாகத்தை முன்னிட்டு மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணி நடை திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவுகள், இன்னிசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 24ல் திருஞான சம்பந்தர் விழா பாலுாட்டும் விழா நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.