திருவண்ணாமலையில் ஓட்டுப் போட்ட கிரிவலப்பாதை சாதுக்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள், நேற்று ஓட்டுப் போட்டனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதுக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தரமாக தங்க இடமில்லாததால், கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர மரத்தடியிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஓட்டுரிமை கேட்டு, கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால், நிரந்தர முகவரி இல்லாததால், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சாதுக்கள் ஒன்று கூடி, ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க அனுமதித்தது. இதன்படி, முதல் கட்டமாக, 752 சாதுக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தியந்தல் மற்றும் ஆணாய்பிறந்தான் கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 7 மணிக்கே, ஓட்டுப் போடுவதற்காக வந்த சாதுக்கள் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். தமிழகத்தில் பல்வேறு ஆன்மிக தலங்களில் சாதுக்கள் இருந்தாலும், திருவண்ணாமலையில் உள்ள சாதுக்களுக்கு மட்டுமே, ஓட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.