ஏத்தாப்பூரில் தங்கும் விடுதி அமைக்க பக்தர்கள் வேண்டுகோள்!
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூரில் உள்ள, சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தரும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் தங்கும் விடுதி என, எதுவும் இல்லாததால், வெளியூரில் இருந்து வருகை தரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி பேளூர், ஏத்தாப்பூர், ஆத்தூர், ஆறகளூர், கூகையூர் அடுத்த திட்டக்குடி வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த நதிக்கரையில் மொத்தம், 12 சிவாலயங்கள் உள்ளதும், அதில் பஞ்சபூத தலங்களும் அடங்கும். ஒரே நாளில், 12 சிவாலயங்களை தரிசித்தால், 12 ஜோதிர் லிங்கங்களை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி என, முக்கிய நாட்களில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தங்கும் விடுதி என, எந்த வசதியும் செய்யப்படவில்லை. பக்தர்கள் நலன் கருதி, கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.