செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி மதியம் 1:00 மணிக்கு அர்ஜூனன், திரவுபதியம்மன் சுவாமி திருகல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று 17ம் தேதி காலை 11:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. இதில், செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.