தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம்!
தளவாய்புரம்: வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு தேவதானத்தில் தேரோட்டம் நடந்தது. பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினசரி சுவாமி மற்றும் அம்பாள் கற்பகதரு, காமதேனு, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 7ம் திருநாளன்று சுவாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண முடிவில் சுவாமி யானை வாகனத்திலும்,அம்பாள் பூ பல்லக்கில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை தேரோட்டம் நடந்தது.
கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர் வடக்பிடிக்க தேரோட்டம் நடந்தது.முதல் வந்த பெரிய தேரில் நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி பிரியாவிடை அம்மனுடனும், இரண்டாவது வந்த சிறிய தேரில் தவம்பெற்ற நாயகி அம்மன் வீற்றிருந்தார்.தேர் நான்கு மாட வீதிகள் வழியாக நிலையம் வந்தடைந்தது. சிறிய தேருக்கு பின்னால் தங்கள் கஷ்டங்கள், பிணிகள் நீங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தனர்.10 நாட்கள் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியை கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர்,செயல் அலுவலர் அறிவழகன் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாட்டை ராஜபாளையம் டி.எஸ்.பி சங்ரேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் செய்திருந்தனர்.