உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ தேரோட்டம்!

நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ தேரோட்டம்!

பரமக்குடி: பரமக்குடி அருகே திருமருதுõர் என்னும் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், வைகாசி வசந்த உற்சவ திருவிழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இக்கோயிலில் வைகாசி திருவிழாவானது, மே 12 ல் காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் இந்திர விமானம், வெள்ளி நந்தி, அன்ன, பூத, சிம்ம, யானை, ரிஷபம், கைலாசம், கிளி, குதிரை சேஷ, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிவலம் வந்தனர். இதனையடுத்து (மே 20) காலை 8.30 மணிக்கு மேல் சுவாமி பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், அதனை தொடர்ந்து சவுந்தர்யநாயகி அம்மன் மறு தேரிலும் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் சிவ, சிவ கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் மதியம் 1 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. விழாவினையொட்டி பரமக்குடி, எமனேஸ்வரம், ஜீவாநகர், நயினார்கோவில் ஆகிய பல இடங்களில் பக்தர்களின் வசதிக்காக நீர், மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர். விழாவில் நயினார்கோவில் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் மகேந்திரன், சரக பொறுப்பாளர் வைரவசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !