அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
மேட்டுப்பாளையம்: குட்டையூர் மாதேஸ்வரன் கோவிலில் புதிதாக கட்டியுள்ள அர்த்தநாரீஸ்வரர், ஐஸ்வர்ய கணபதி கோவில்களின் கும்பாபிஷேக விழா துவங்கியது. மேட்டுப்பாளையம் -காரமடை ரோடு குட்டையூரில் மலை மீது மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில் ஐஸ்வர்ய கணபதி கோவிலும், மலையின் பின்பக்கம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும், கிரிவலப்பாதையில் புதிதாக எட்டு இடங்களில் இந்திரலிங்கம், அக்னிலி ங்கம், எமலிங்கம், நைருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானலிங்கம் ஆகிய லிங்கங்களின் சன்னதிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இதன் மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 16ம் தேதி முளைப்பாரி இடும் வழிப்பாட்டுடன் துவங்கியது. வரும், 26ம் தேதி காலை சன்னதியில் கோபுர கலசங்கள் அமைத்து, சுவாமி விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட உள்ளது. 27ம் தேதி அதிகாலை, 4:30 லிருந்து 6:30 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.