உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடிகார கணவனை திருத்த என்ன வழி?

குடிகார கணவனை திருத்த என்ன வழி?

சங்கர மடத்தில் காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்க பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு நடுத்தர வயது சுமங்கலிப் பெண்ணும் ஒருவர். அவரது கண்கள் குளம் போல கலங்கியிருந்தது. இதை உற்றுக் கவனித்த பெரியவர் சீடர்களிடம் அந்தப் பெண்ணை அழைத்துவரும் படி கட்டளையிட்டார். அவர் அருகில் வந்ததும், ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார். அந்த பெண்,“என் கணவர் தினமும் குடித்து விட்டு இரவு 12 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருகிறார். குடியால் அவர் உடம்பும், மனமும் கெட்டு விட்டது. எப்படி திருத்துவது என்றே தெரியவில்லை,” என்றாள்.பெரியவர், “உனக்கு குழந்தைகள் இருக்கா?” என்று கேட்டார்.“ஆமாம் சுவாமி! ஒரு பையன், ஒரு பெண் இருக்காங்க!” என்றாள்.“உன் கணவர் குழந்தைகளிடம் அன்பாய் இருப்பாரா?” என்று கேட்டார்.“குழந்தைகள் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார். அவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல் வந்தால் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாது,” என்றாள். “அப்ப நீ ஒன்று செய்து பார். உன் கணவர் குடித்து விட்டு வந்தால், குழந்தைகளிடம் சொல்லி விடுவேன் என்று உறுதிபட தெரிவித்து விடு. இதன் மூலம் அப்பா என்ற பாசம், மரியாதை எல்லாம் போய் விடும் என்பதையும் சொல்லி விடு,” என்றார். அவளும் பெரியவரிடம் ஆசி பெற்று சமாதானத்துடன் வீட்டுக்குப் புறப்பட்டாள். அந்தப் பெண்ணும் அப்படியே செய்ய, அவளது கணவருக்கு பயம் வந்து விட்டது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாற ஆரம்பித்தார். சில மாதங்கள் கழிந்ததும், அந்த பெண் தன் கணவர், குழந்தைகளுடன் காஞ்சிபுரம் வந்தார். அவருடைய சிரித்த முகமே, கணவர் குடியில் இருந்து திருந்தி விட்டதை உறுதிப்படுத்தியது. ஒரு மனிதன் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், அவனிடமும் ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யும். அதை பயன்படுத்தி தான் அவர்களைத் திருத்தியாக வேண்டும் என்பது பெரியவரின் செய்கை மூலம் நமக்கு தெரிய வருகிறது. (மகான் காஞ்சிப் பெரியவர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !