ஆற்றில் கம்பம் விடும் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சியில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கடந்த மூன்று நாட்களாக மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று, மாலை, 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது. கம்பம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோவிலில் உள்ள கம்பத்திற்கு பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் மலர்கள் துாவி, சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து செல்லப்பட்டது. கோவிலில் இருந்தும் கடை வீதி வழியாக அமராவதி ஆற்றில் கொண்டு கம்பம் ஆற்றில் விடப்பட்டது. திருவிழாவைக் காண கரூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இன்று தேதி இரவு, 7 மணிக்கு புஷ்ப விமானம், 27ம் தேதி இரவு, 7 மணிக்கு கருட வாகனம், 28ம் தேதி இரவு, 7 மணிக்கு மயில் வாகனம் ஊர்வலம் நடக்கிறது.