40 ஆண்டுகளுக்கு பின் ராஜகணபதி கோவிலில் கோடி அர்ச்சனை!
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், கோடி அர்ச்சனை பெருவிழா நடக்கிறது. இதற்காக, நேற்று அதிகாலை, ஹோமம் நடத்தப்பட்டு, கோவில் முன் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. சேலம், தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், 1976ம் ஆண்டு, உலக நன்மைக்காகவும், மக்கள் நிம்மதியுடன் வாழவும், கோடி அர்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால், அந்த விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பின், வரும், 9 முதல், 11ம் தேதி வரை, இந்த விழா நடக்கிறது. அப்போது, அனைத்து நாட்களிலும் காலை, 7.30 மணி முதல், இரவு, 9 மணி வரை சிறப்பு பூஜை நடக்கும். அதற்காக நேற்று அதிகாலை, ?ஹாமம் நடத்தப்பட்டு, கோவில் முன் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. இதுகுறித்து ராஜகணபதி கோவில் குருக்கள் கூறியதாவது: ராஜகணபதி கோவிலில் நடக்க உள்ள, கோடி அர்ச்சனை விழா, தொடர்ந்து, 33 நாட்கள் நடக்கும். விழா முடிவில், கோடி அர்ச்சனைகளை செய்து முடிக்க வேண்டும். அதனால் தான், கோடி அர்ச்சனை என்ற பெயர் வந்தது. அதற்கு, அதிக பணம் செலவாகும். 1976ம் ஆண்டுக்கு பின், இந்த விழா நடத்த, யாரும் முன்வரவில்லை. இதனால், தடைபட்ட விழா, கடவுளின் ஆசியால், தற்போது நடைபெற உள்ளது. இதில், 20 குருக்கள், 100 பாடசாலை மாணவர்கள், 40 சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு பூஜை செய்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.