திருவடிக்கு சக்தி அதிகம்
அவிநாசி: ""பகவான் திருவடியை தொழுது வணங்கினால், எல்லாம் நல்லதே நடக்கும்; நன்மையே விளையும், என, திருச்சி கல்யாணராமன் பேசினார். அவிநாசி ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, அடுத்த மாதம், 11ல் நடைபெறுகிறது. அதையொட்டி, கம்பராமாயண தொடர் சொற்பொழிவு, கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ஒவ்வொரு செயலிலும், பகவானை நினைத்து ஈடுபட்டால், வெற்றியே கிட்டும். நமது கர்மவினைகள் நம்மை தடுத்தாலும், பகவானை தொழுதால், எல்லாம் விலகும். நாட்டை ஆள்வதற்கு, ஸ்ரீராமனை, தசரதன் அறிவித்தார். கைகேயி, பரதனுக்கு பட்டம் சூட நினைத்தாள். ஆனால், ஸ்ரீராமரோ, பாதுகைக்கு பட்டம் சூடினார். இதுவே ராமரின் கருணை. ராமனை சந்தித்து, நாட்டுக்கு அழைத்துச் செல்ல, பரதன் காட்டுக்கு வந்தான். அங்கிருந்த குகப்பெருமான், பதவியை துறந்து வந்த பரதனின் பெருமையை பறைசாற்றுகிறார். அதனால், ராமனது பாதுகையை பெற்று, அதை வைத்து ஆட்சியமைக்க பரதன் சென்றான். ஏனென்றால், பகவான் திருவடிக்கு சக்தி அதிகம். ஸ்ரீராம நாம மந்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்து வந்தால், நல்லதே நடக்கும்.இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவை தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சொற்பொழிவு, நாளை மறுதினம் நிறைவடைகிறது.