உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளம் பெறுமா திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளம்

வளம் பெறுமா திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளம் முழுவதுமாக வற்றியுள்ள நிலையில், குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் வெளியே, ஆதிசேஷர் தீர்த்த குளம் உள்ளது. கடந்த டிசம்பர் பெருமழைக்கு, பாதியளவுக்கு குளம் நிரம்பியது. இதனால், பத்தாண்டுகளுக்குப் பின், கடந்த மாசி பிரம்மோற்சவத்தின் போது தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. குளத்தைச் சீரமைக்காமலே, இதை நடத்தியது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதன்பின், வெயிலின் தாக்கத்தால் குளத்துத் தண்ணீர் வேகமாக வற்றியது. தற்போது, தரை தெரிய ஆரம்பித்து விட்டது. குளத்தில் தண்ணீர் இல்லாதபோதே, கோவில் குளத்தில் உடைந்திருக்கும் படிக்கட்டுகளைச் சீரமைக்க வேண்டும்; தெப்பத்தின் நடுவில் இருக்கும் மண்டபத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றி, வர்ணம் பூச வேண்டுமென்பது, பக்தர்களின் எதிர்பார்ப்பு.

பிளாஸ்டிக் கழிவுகள்: குளத்தை சுற்றி மழைநீர் குளத்திற்கு வருவதற்கு, ஜல்லடைகள், தொட்டிகள் உள்ளன. கடந்த மழையின்போது, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குளத்திற்கு முறையாக மழைநீர் வரவில்லை. சிலர், குளத்திற்கு மழைநீர் வரும் குழாயை சேதப்படுத்தியதே இதற்குக் காரணம். அதில், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் போன்றவை அடைத்துக் கொண்டுள்ளன. அதனை சரிசெய்யாவிடில், குளத்துக்கு தண்ணீர் வருவது சிரமம். அது மட்டுமின்றி, குளத்தின் தரைப்பகுதியில் களிமண் இல்லாததே, விரைவாகத் தண்ணீர் வற்றுவதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

300 லோடு மண்: வண்டல் மண்ணைக் கொட்டி, குளத்தின் சூழல் தன்மையைப் பாதுகாத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புண்டு. தென்மேற்குப் பருவமழை காலத்திற்குள் இதைச் செய்தால் தான், வடகிழக்குப் பருவமழையில் குளம் நிறையும்.

கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது: கோவில் குளம் சீரமைப்பு பணி, விரைவில் துவங்கும். மராமத்து பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு தயாராகி வருகிறது. கரிசல் மண் 300 லோடுக்கு ஒப்பந்தம் கோரப்படவுள்ளது என்றனர். செய்வதை திருந்தச் செய்வதோடு, விரைவாகச் செய்தால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !