உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமிதோப்பு வைகுண்டரின் வைகாசி தேரோட்ட திருவிழா

சாமிதோப்பு வைகுண்டரின் வைகாசி தேரோட்ட திருவிழா

நாகர்கோவில்: சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியில் நடை பெற்ற வைகாசி தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குமரிமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியும் ஒன்றாகும். இங்கு தை, வைகாசி மற்றும் ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழா நடை பெறும். இந்த வருட வைகாசி திருவிழா கடந்த 27 -ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. தினமும் அன்னதர்மம் நடைபெற்றது.இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலாவரும் நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை 8-ம் திருவிழாவை முன்னிட்டு வெள்ளைக் குதிரை வாகனத்தில் அய்யா பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் திருநாள் விழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அய்யா வைகுண்ட சாமி பதியில் இருந்து பல்லக்கு வாகனத்தில் பவனியாக வந்து தேரில் எழுந்தருளினார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா அரகர சிவசிவ அரகரா என்ற பக்தி கோஷம் முழங்க 4 ரத வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்தனர். வடக்கு வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுருள் வைத்து அய்யாவை வழிபபட்டு நேர்த்திகடனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !