கில்லா வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், ஷராப் பஜார் பகுதியில், ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் திருக்கோவில், 91ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளை அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சூரியபிரபை வாகனம் உள்ளிட்ட, பல வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை உற்சவம், கடந்த, 10ம் தேதியும், நேற்று தேர்த்திருவிழாவும் நடந்தது. இதையொட்டி சுவாமிகளுக்கு அதிகாலை, 4 மணிக்கு, திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முக்கிய வீதி வழியாக தேரோட்டம் நடந்தது. விழா வரும், 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.