உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரூரா... தியாகேசா... கோஷத்துடன் ஆழி தேரோட்டம் கோலாகலம்!

ஆரூரா... தியாகேசா... கோஷத்துடன் ஆழி தேரோட்டம் கோலாகலம்!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்ட விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி  பரவசத்துடன், ‘ஆரூரா... தியாகேசா...’ என கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்க, பழம் பெருமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித் தேரோட்டம். இத்தேர், ஆசியாவிலேயே மிகப் பெரியது. 2010ல், தேரோட்டம் நடந்தது. அதன்பின், தேர் சீரமைப்புக்காக தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

தேர் சீரமைப்பு பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 26ல், ஆழித்தேர் வெள்ளோட்டம் நடந்தது. ஆழித்தேரானது, 9 அடி விட்டமும்,  ஒன்றரை அடி அகலமும் உடைய, நான்கு இரும்பு சக்கரங்களின் மேல், கலை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம்,  96 அடி; எடை, 300 டன். ஆழித் தேரோட்டத்திற்காக, கடந்த மார்ச் மாதம், 26ம் தேதி, தியாகராஜ சுவாமி, யதாஸ்தானத்தில் இருந்து, ஆயிரங்கால்  மண்டபம் என்ற தேவாசிரிய மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, தினமும் தியாகராஜ சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 14ம் தேதி  இரவு, அஜபா நடனத்துடன், தேருக்கு தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். விநாயகர், சுப்ரமணியர் ஆகிய இரு சுவாமிகளும் தனித்தனி தேரில்  எழுந்தருளினர். நேற்று முன்தினம் காலை, விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. இரண்டு நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின், நேற்று  காலை, 7:45 மணிக்கு, ஆழித் தேரோட்டத்தை, கலெக்டர் மதிவாணன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்  பிடித்து இழுத்து வர, பின்புறம் புல்டோசர் இயந்திரத்தால்,  தேர் தள்ளப்பட்டது. நிலையடியில் இருந்து கிளம்பிய ஆழித்தேர், கீழ வீதி, தெற்கு வீதி,  மேல வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்தது. வழிநெடுகிலும், ‘ஆரூரா... தியாகேசா...’ என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தி யாகராஜ சுவாமியை வழிபட்டனர்.

மக்கள் கூட்டத்தின் மத்தியில், நான்கு வீதிகளிலும், தேர் ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் வலம் வந்தன. நேற்று இரவு, கீழவீதிக்கு தேர் வந்தடைந்தது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு,  திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திருவாரூர் நகரில்   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !