உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் விமானத்திற்கு தடையில்லை!

திருமலையில் விமானத்திற்கு தடையில்லை!

திருப்பதி, : ’திருமலைக்கு மேல், விமானம் பறக்க தடை விதிக்க முடியாது’ என, மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.’திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு மேல் விமானம் பறப்பது, ஆகம விதிகளுக்கு முரணானது. பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், திருமலைக்கு மேல், விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும்’ என, தேவஸ்தானம், மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ’அதுபோன்று தடை விதிக்க முடியாது’ என, தெளிவுபடுத்தி உள்ளது.

இது தொடர்பாக, அந்த அமைச்சகம் கூறியுள்ளதாவது: திருப்பதி விமான நிலையம், பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது; இரு மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ளது. அதனால், திருப்பதில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும், திருமலை மேல், பறக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. விமான போக்குவரத்து பெருகியுள்ள இந்த நாட்களில், சில முக்கிய கோவில்களின் மேல், விமானம் பறக்க தடை விதிப்பது சாத்தியமற்றது. நாட்டில் உள்ள பல பகுதிகளில், விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும் என, மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்றால், நாடு முழுவதும் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படும். இவ்வாறு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !