அம்மன் தவமிருந்த இடத்தில் இல்லை அடிப்படை வசதிகள்: தவிப்பில் பக்தர்கள்!
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டம் துாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன் தவமிருந்த அம்மா மச்சு என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் கோயில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது தேவதானப்பட்டி மூங்கிணை காமாட்சி அம்மன் கோயில். அரக்கர்களை அழிப்பதற்காக காஞ்சி காமாட்சி அம்மன் இங்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.
அம்மன் தவம் இருந்த இடம்: தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளார் வழியாக 7 கிலோ மீட்டம் துாரம் ரோடு, 3 கிலோ மீட்டர் துாரம் வயல்வெளி குண்டும், குழியுமான பாதை, 5 கிலோ மீட்டர் துாரம் வனப்பகுதியில் இயற்கை சூழ்ந்த, பசுமையான பாதையில் பயணம், வழியில் இரண்டு ஆறுகளை கடந்து சென்றால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மணிகண்ட மலை என்ற ஒரு மலை உள்ளது. அங்கு மிருகண்டரிஷி தவமிருந்ததால் மிருகண்ட மலை என்றழைக்கப்பட்டு, காலப் போக்கில் முருகமலையாக மாறியது. தேவர்களை துன்புறுத்திய வஜ்ரதந்தன் என்ற அரக்கனை வதம் செய்து அம்மலை அடிவாரத்தில் காமாட்சி அம்மன் தவமிருந்த இடம் அம்மா மச்சு என்று அழைக்கப்படுகிறது. இங்கு சிறிய கட்டடத்தில் அம்மன் சிலையுடன் கோயில் உள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை: இந்த இடத்தின் வலது பக்கம் தலையாறு அருவி செல்கிறது. இங்கிருந்து ஒருகிலோ மீட்டர் துாரத்தில் நீர் தேங்கிய குட்டை ஒன்று உள்ளது. குழந்தை பாக்யம், திருமணத்தடை நீங்குவது உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக இங்கு வரும் பக்தர்கள் இந்த நீர் தேக்கத்தில் நீராடுகின்றனர். வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். பஸ் வசதி இல்லை. மலை அடிவாரம் வரை ஆட்டோக்கள் செல்கின்றன. பின்னர் கரடு, முரடு, குண்டும், குழியுமான வழித்தடத்தில் நடந்து செல்ல வேண்டும்.
பக்தர்கள் வனப்பகுதியில் நடந்து செல்கின்ற போது தலையாறு அருவி, நீர் வருகின்ற ஆற்றுப் பாதையின் குறுக்கே செல்கின்றது. மழைக்காலங்களில் ஆற்றில் கூடுதலான நீர் வரும் போது அதைக்கடந்து கோயிலுக்கு செல்ல முடியாது. இதற்காக இருகரைகளையும் இணைக்கின்ற வகையில் இரும்பு செயின் கட்டப்பட்டுள்ளது. பாறைகளுக்கு இடையே பக்தர்கள் செயினைப்பிடித்து பயணம் செய்கின்றனர். எனவே மழைக்காலங்களிலும் கோயிலுக்கு செல்கின்ற வகையில் இந்த இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும். சிறிய கட்டடத்தில் அம்மன் சிலை உள்ளது. லிங்கம் மற்றும் சில தெய்வங்கள் திறந்த வெளியில் உள்ளன. பக்தர்கள் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். மழை வந்தால் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு எவ்விதமான இடமும் இல்லை. எனவே இங்கு பக்தர்களுக்கு தேவைான குடிநீர், கழிப்பிடம், சமையலறை, மண்டபம், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிரமம்: தவமணி,ஜெயமங்கலம்: மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மா மச்சுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாதால் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே பக்தர்கள் தங்குவதற்கு தேவையான மண்டபம், மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க இந்து அறநிலையத் துறை, வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பாலம் வேண்டும்: வடிவேல், ஜெயமங்கலம்: அம்மா மச்சு பகுதிக்கு வனத்துறைக்கு சொந்தமான வழித்தடத்தில் செல்ல வேண்டியுள்ளது. அங்கு தலையாறு அருவி, நீர் வருகின்ற ஆற்றுப் பாதையின் குறுக்கே செல்கின்றது. இந்த இடத்தில் பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. மேலும் கூடுதல் நீர் வரும் போது ஆற்றைக்கடந்து செல்வதில் சிக்கல் உள்ளது. இந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.