யோகா தினம்: விழாக்கோலம் பூண்டது நந்தனம்
சென்னை: இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரமிட் ஆன்மிக சமுதாய அமைப்பு சார்பில் சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.நமது நாட்டின் பாரம்பரிய கலையான யோகா பற்றிய விழிப்புணர்வை பரப்பும் வகையில், ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையொட்டி, நாடு முழுவதும் நேற்று ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சென்னையிலும், பல்வேறு இடங்களில், யோகா நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவை சேர்ந்த பிரமிட் ஆன்மிக, சமுதாய அமைப்பின் சார்பில், சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு, பிராணாயாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
அமைப்பின நிறுவனர் பத்ரிஜி தலைமையில், யோகா ஆசிரியை டாக்டர் ஜெயந்தி முன்னிலையில், யோகா கலையில் உலக சாதனை படைத்த அம்ருதா ஆனந்த், மத்திய அரசு பரிந்துரைத்த 15 ஆசனங்களை செய்து காட்டினார். பின், தியான நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், 15,330 பேர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், உடலும், உள்ளமும் நலமாக இருந்தால்தான் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். இதற்கு சிறந்த மார்க்கம் யோகாதான், என்றார்.நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனர் நிர்மல் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள், பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சித்த மருத்துவ கல்லுாரியில்...தாம்பரம் சானடோரியம், தேசிய சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் சித்த மருத்துவமனை வளாகத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரியின் இயக்குனர் வி.பானுமதி, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவ கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவமனையின் உள், புற நோயாளிகள் என, மொத்தம், 500 பேர் பங்கேற்றனர். யோகா செய்தவர்களுக்கு, நிகழ்ச்சியின் முடிவில், சுக்குமல்லி காபி, சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை, யோகா செய்வதன் மூலம் தவிர்ப்பது குறித்த, விழிப்புணர்வு பிரசுரங்களும், டி - சர்ட்டும் வழங்கப்பட்டன.