உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேள்கடிக்கு வித்தியாசமான மருந்து!

தேள்கடிக்கு வித்தியாசமான மருந்து!

காஞ்சிப்பெரியவருக்கு வேதபுரி, சந்தானம் என்ற சீடர்கள் பல காலமாக தொண்டாற்றி வந்தனர். ஒருசமயம் பெரியவர் காலையில் ஆத்மபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தேள் பெரியவர் தொடையில் வேகமாக ஊர்ந்து சென்றது. அதைப் பார்த்து பதறிப் போன வேதபுரியும், சந்தானமும், “பெரியவா! உங்க தொடையில் தேள்,” என்று சப்தமிட்டனர். பெரியவர் அவர்களிடம், “அதுக்கு ஏன் இப்படி பதறுறீங்க! அதுக்கு என்னை புடிச்சிருக்கு! அதனாலே ஊர்ந்து கிட்டு இருக்கு!” என்றவர், “ஒன்று செய்கிறீர்களா! நீங்க ராமாயணத்தை எடுத்து பாலகாண்டம் முதல் பட்டாபிஷேகம் வரைக்கும் திரும்பத் திரும்ப படியுங்கோ!” என்றார்.பெரியவரின் உத்தரவு வித்தியாசமாக இருந்ததால் அதுபற்றி புரியாத அந்த சீடர்கள், அவர் சொன்ன பகுதிகளை திரும்பத் திரும்ப சத்தமாக வாசித்தனர். சில மணி நேரம் சென்ற பின் அவர்களை அழைத்த பெரியவர் அவர்களிடம்,“உங்களுக்கு வாய் வலிக்கலையா!” என்றார்.“இந்தாங்கோ!” என்று சிறிது கற்கண்டை அவர்களிடம் கொடுத்த பெரியவர்,“எனக்காக ராமாயணம் வாசிச்சதாலே தேள் கடிச்ச வலி போச்சு! அதனாலே உங்களுக்கு இந்த பிரசாதம்,” என்றார். அந்த தேளையும் அதன் பின் காணவில்லை. அது எங்கு போனது என்பது பெரியவருக்கே வெளிச்சம்!இன்னொரு சமயம் பெரியவர் இந்த சீடர்களிடம், தனக்கு நிறைய தேங்காய், வெல்லம் சேர்த்து போளி வேண்டுமென கேட்டார். அவர்களும் தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தானம் வேதபுரியிடம், “எனக்கு வாய், வயிறெல்லாம் ஒரே புண். கொஞ்சம் தேங்கா சாப்பிட்டா நல்லாயிருக்கும்,” என்று தற்செயலாக பேசிக் கொண்டிருந்தார். போளி தயாரானதும் பெரியவர் முன் வைக்கப்பட்டது. ஆனால் பெரியவர் அதை சாப்பிடாமல் கொஞ்சம் வெண்ணெய் கொண்டு வரச் சொன்னார். அவற்றை பத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டினார். சந்தானத்தை அழைத்து,“உனக்கு வாய், வயிறெல்லாம் புண் தானே! வெறும் தேங்காய் சாப்பிட்டால் பயனில்லை. இந்த வெண்ணெயை சாப்பிடு, சரியாயிடும்!” என்றார்.சமையல்கட்டில் தாங்கள் பேசியது பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று அதிசயப்பட்ட சந்தானம் பெரியவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார். பெரியவர் அவரை ஆசிர்வதித்து பெயரளவுக்கு ஒரு சிறு துண்டு போளியை எடுத்துக் கொண்டு, ஒன்றை சந்தானத்திடமும், மற்றதை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் தர அருள்பாலித்தார். (மகான் காஞ்சிப் பெரியவர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !