கஷ்டங்கள் கரும்பாகட்டும்!
அரபுநாட்டில் வசித்த இப்னு அப்பாஸ் (ரலி) என்பவர், தனது தோழர்களின் செயல்பாட்டில் வெறுப்படைந்தார். பின் காட்டிற்கு சென்று விட்டார். நாட்டில் இருக்கும் மக்களை விட, காட்டிலுள்ள மிருகங்களே மேல் என அவற்றுடன் பழகி வந்தார். ஒருமுறை, அங்கு வந்த வெள்ளையர்களின் கண்ணில் இவர் படவே, அவர்கள் இவரை சிறைப்படுத்தி யூதர்கள் வசிக்கும் தராபலுஸ் என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கே அகழி வெட்டும் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தினர். முன்பின் அறியாதவர்களிடம் சிக்கி வேதனைப்படுவதை விட, தவறு செய்யும் நண்பர்கள் செய்கையே தேவலாம் என அப்பாஸுக்கு தோன்றியது. இந்நேரத்தில், ஹலபு என்ற ஊரில் இருந்து ஒரு பணக்காரர் வந்தார். அவருக்கு அப்பாஸைத் தெரியும். வெள்ளையர்களிடம் பத்து தினார் பணம் கட்டி, அப்பாஸை விடுவித்தார். தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று, அந்த உழைப்பாளியை தன் அழகு மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். சில நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் தம்பதியர். திடீரென தன் பணக்கார புத்தியைக் காட்டினாள் அந்தப் பெண். எப்போதும் சண்டை. அவள் பேசினாலே சாட்டையால் அடித்தது போல வார்த்தைகள் வந்தன. குறிப்பாக, “நீ என் தந்தையால் பத்து தினார் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட அடிமை தானே! நான் சொல்வதைக் கேள்,” என்பாள். ‘பணம் கொடுத்து நம்மை மீட்டு வந்ததற்கு பதிலாக, அகழி வேலையிலேயே இருந்திருக்கலாமோ’ என நினைத்தார் அப்பாஸ். நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக்கூடாது. ஒரு கஷ்டத்தில் சிக்கியிருக்கும்போது, இன்னொரு பெரிய கஷ்டம் வந்தால், பழைய கஷ்டம் எளிதாகி விடும். எனவே எல்லா கஷ்டங்களையும் கரும்பு போல இனிமையாய் எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.