புனித அந்தோணியார் தேர்த்திருவிழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேர்த்திருவிழா நடந்தது. கடந்த, 19ம் தேதி பங்கு பாதிரியார் ஜார்ஜ் ரொசாரியொ தலைமையில், கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டனிஸ், கூட்டு பாடற் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர், புனித அந்தோணியார் உருவம் போட்ட கொடி ஏற்றப்பட்டது. விழாவில் ஒவ்வொரு நாளும் திருப்பலி, நவநாள் அருளுரை, வேண்டுதல் தேர் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 26ம் தேதி காலை, 8:15 மணிக்கு அற்புத கெபி ஆரோக்கிய அன்னை சர்ச் பாதிரியார் ஜேக்கப், சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, முதல் நற்கருணை அருட்சாதனம் வழங்கினார். கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பாடற் திருப்பலியை நிறைவேற்றி, அருட்சாதனம் வழங்கினார். இரவில் அலங்காரம் செய்த அந்தோணியார் தேர் பவனி, கோவிலில் இருந்து புறப்பட்டு, பஸ் ஸ்டாண்ட், அண்ணாஜி ரோடு, செந்தில் தியேட்டர் ரோடு, ஊட்டி மெயின் ரோடு வழியாக மீண்டும் சர்ச்சை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இறுதியில் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.