17ம் நூற்றாண்டு கல் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
சேத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சேத்துார் மாரியம்மன் கோயில் பின்புறம் காலியிடத்தில் குப்பை இடையில் ஒரு கல் சிற்பம், தனியார் ஆங்கிலப்பள்ளி எதிரே பள்ளத்தில் சாய்ந்த நிலையில் இரண்டு கல் சிற்பங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. இது தொடர்பாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது: இப்பகுதியில் பழங்காலத்தில் சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ள தலைவர், வீரன், குறுநில மன்னர் இறந்தால், அவரது மனைவியும் சேர்ந்து இறந்து விடுவது வழக்கத்தில் இருந்தது. கணவன் மீது வைத்திருந்த காதல் மிகுதியால் மனைவி உடன்கட்டை ஏறுவது சமூக மரபாக இருந்தது. சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் பற்றி பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.
இருவரும் இறந்ததன் நினைவாக நிறுவப்படும் நினைவுக்கற்களே சதிக்கல் என அழைக்கப்படுகிறது. இத்தகைய சிற்பங்கள் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இச்சிற்பங்கள் தற்போது குப்பை இடையே கிடப்பது வேதனையளிக்கிறது. சொக்கர் - மீனாட்சியாக வழிபாடுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிற்பத்தை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சொக்கர் - மீனாட்சி என்ற பெயரில் வழிபட்டு வந்துள்ளனர். இச்சிற்பத்தில் ஆணும்,பெண்ணும் அமர்ந்த நிலையில் ஆண் தனது வலது காலை கீழே தொங்கவிட்டபடி, இடது காலை மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் ஓரு பெண் வலது காலை மடக்கியும் இடது காலை தொங்க விட்ட நிலையில், ஆண் தனது வலது கையில் அல்லிமலர் ஒன்றை வைத்திருப்பதும், இடது கையைத் தன் தொடை மீது வைத்துள்ள நிலையில், இதே போல பெண்ணும் வலது கையில் கண்ணாடியுடன், கொண்டையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
17 ம் நுாற்றாண்டை சேர்ந்தது: இச்சிற்பத்தில் ஆணின் தலையலங்காரம் கிரீடம் போன்றும், ஆண், பெண் இருவரின் காதணிகளும் தோள்பட்டையை தொட்டவாறு சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அதோடு சிற்பத்தின் கீழ்பகுதியில் ஒரு பெண் மட்டும் தன் இரண்டு கால்களை மடக்கி அமர்ந்துள்ள நிலையில், வலது கையில் அல்லி மலர் ஒன்றை ஏந்தியுள்ளது போன்று செதுக்கப்பட்டுஉள்ளது. மற்ற இரண்டு சிற்பங்களில் சற்று வித்தியாசங்களுடன் பூச்செண்டு, வாள் வைத்திருப்பது போன்று மிக அழகாக வடிவமைத்துள்ளனர். சிற்ப வேலைப்பாடுகளை பார்த்தால் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
ராயல் பாரம்பரிய கழகம்: சேத்துார் பகுதியில் காணப்படும் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 கல் சிற்பங்களை ராஜூக்கல் கல்லுாரியில் செயல்பட்டு வரும் ராயல் பாரம்பரியக் கழகம் என்ற அமைப்பு மூலம் கல்லுாரி வளாக அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பது பற்றிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது பண்பாட்டை விளக்கும் இத்தகைய சிற்பங்களை பாதுகாப்பதன் மூலம் நமது பகுதி வரலாற்றை அழியாமல் தடுக்க முடியும், என்றார்.