உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோவில் ரோப்கார் நிறுத்தம்: பக்தர்கள் ஏமாற்றம்

பழநி மலைக்கோவில் ரோப்கார் நிறுத்தம்: பக்தர்கள் ஏமாற்றம்

பழநி: பழநி மலைக்கோவில், ரோப்கார் சேவை, மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பழநி கோவிலில் மட்டும் தான் தினமும், ரோப்கார் சேவை காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை உள்ளது. மூன்று நிமிடத்தில் எளிதாக மலைக்கு சென்று விடலாம். சில நாட்களாக பலத்தக் காற்று காரணமாக, ரோப்கார் சேவை தினமும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம், ரோப்கார் ஸ்டேஷன் கீழ்தளத்திலுள்ள மோட்டாரின் திடீர் பழுதால் சேவை நிறுத்தப்பட்டது. இது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நேற்று பழநியில் குவிந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரோப்காரை கோல்கட்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் பராமரிக்கின்றனர். கீழ்தளத்திலுள்ள மோட்டாரின் உதிரிபாகம் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அது இங்கு கிடைக்காது, பெங்களூரில் இருந்து உதிரிபாகம் வந்து, மோட்டார் பழுதை நீக்க வேண்டும். பின், சோதனை ஓட்டம் நடத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த பின், பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !