அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ கொடியேற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் காலமான, தட்சணாயன புண்ணிய காலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா, நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது, இதை முன்னிட்டு அதிகாலை, 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன், உற்சவ மூர்த்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் மற்றும் பராசக்தி அம்மன், கோவில் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். பின்பு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, காலை, 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வரும், 16ம் தேதி வரை தினமும் சுவாமி, அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் காலை மற்றும் இரவு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.