உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளாற்றின் கரையில் அருளும் நம்பெருமாள்!

நள்ளாற்றின் கரையில் அருளும் நம்பெருமாள்!

அவிநாசி: ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான்
என்றெதிர்.. - என பெருமாளை எண்ணிய ஆண்டாள், எம்பெருமானை அடையும் நாளை, அனுதினம் துதித்த வண்ணம் பாடினாள். அவ்வாறே,  பெருமாளை கரம் பிடித்தாள். அதுபோல, அவிநாசி நள்ளாற்றின் கரையில், எழில்மிகு கோவில் கொண்டு குடியிருக்கும் ஸ்ரீகரிவரதராஜருக்கு. மஹா  சம்ப்ரோக்ஷண பெருவிழா, இன்று நடக்காதா, நாளை  நடக்காதா என, 23 ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு  செவிசாய்த்த நம்பெருமாளுக்கு, திவ்யமாக, மஹா சம்ப்ரோக்ஷண பெருவிழா, நாளை துவங்கி, நான்கு நாட்கள் நடைபெறுகிறது. பார்புகழும் கொ ங்கு மண்டலத்தில், சீர்மிகு சுந்தரமூர்த்தி நாயனரால், தேவாரம் பாடல் பெற்ற ஏழு சிவத்தலங்களில், முதன்மையாக விளங்கும் பெருங்கருணாம்பிகை  அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு, வடக்கு திசையில், நள்ளாற்றின் கரையில், வேண்டுவோருக்கு வேண்டியதை அருளி,  நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபூமி நீளா நாயகி சமேத ஸ்ரீகரிவரதராஜ பெருமாள்.

அபிமான ஸ்தலமாக விளங்கும் இக்கோவில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கல்கார கோவிலாக, அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்கிய இக்கோவிலுக்கு, 1993ல், மஹா சம்ப்ரோக்ஷண பெருவிழா நடைபெற்றது. அதன்பின், 12 ஆண்டுகள் கழித்து, மீண்டும் சம்ப்ரோக்ஷணம் நடந்திருக்க வேண்டும். திருப்பணிகள் சற்று தாமதமாக நடைபெற்று, தற்போது, எழில்மிகு கோவிலாக உருமாற்றம் அடைந்துள்ளது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கருட மண்டபம், முன் மண்டபம் மிக அழகாக கட்டப்பெற்று, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.கோபுரம், மண்டபம், திருமதில், கருட மண்டபம் மற்றும் சுதைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளதை பார்க்கும்போது, திருப்பணியின் நேர்த்தி புரிகிறது. பாழடைந்திருந்த பெருமாள் கோவிலா இது, பக்தர்களின்  விழிகள் விரிந்தாலும், ‘அனைத்தும் எனது அருளே’ என நின்ற கோலத்தில், பெருமாள் நம்மை புன்னகையோடு பார்க்கிறார். உள் மற்றும் வெளிப்பிரகார தளம், திருமதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. திருமதில் முழு வதும், சுதை சிற்பங்கள் எழிலோவியங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் புதிதாக விஷ்வக்ஷேனருக்கு சன்னதியும், துளசி மாடமும் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராமனது திருவடிகளை அனுதினமும் தொழுது வணங்கிய ஹனுமனுக்கு, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் தனி சன்னதியும் கட்டப்பட்டுள்ளது. கரிவரதராஜ பெருமாள் கோவில் முற்றிலும், புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவுற்று, மகா சம்ப்ரோக்ஷண விழா, நாளை துவங்கி, நான்கு நாட்கள் கோலாலகமாக நடை பெறுகிறது. வரும், 11ல், அதிகாலை, 5:15 முதல், 6:15 மணிக்குள் நடைபெறும், இப்பேரின்ப  வைபவத்தை காண, பக்தர்கள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !