பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
பொள்ளாச்சி :பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில், ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. பொள்ளாச்சியில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நேற்று கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளி வாசலில், நேற்று காலை 9:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஹாஜி சிகாபூதீன் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். பெரிய பள்ளி வாசல் தலைவர் தாதாகான் நன்றி கூறினார். இதில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். இதுபோன்று, கோட்டூர் ரோட்டில் உள்ள பள்ளி வாசலில், பெண்களுக்காக தனியாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. சூளேஸ்வரன்பட்டி, குமரன்நகர், பல்லடம் ரோடு உள்ளிட்ட, 14 பள்ளி வாசல்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள, 42 பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு கூட்டுத்தொழுகை நேற்று நடந்தது. பின்னர், பலரும் இனிப்புகள் வழங்கியும்; வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் பண்டிகையை கொண்டாடினர்.
குர்ஆன் வழங்கல் (யாஷின்) பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களுக்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குர்ஆன் புத்தகங்களும், இனிப்புகளும் வழங்கினார். நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், துணை தலைவர் விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் பாரூக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவில்பாளையம், ராமபட்டிணம், மாப்பிள்ளை கவுண்டன்புதுார், புரவிபாளையம்,ஆச்சிப்பட்டி, கோவிந்தனுார், நாகூர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் புனித நுால் வழங்கப்பட்டது. வால்பாறை :வால்பாறை பள்ளிவாசல்களில் ரம்ஜான்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை பள்ளி வாசலில் பண்டிகையொட்டி காலை, 9:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதே போல் சோலையார், சின்கோனா, உருளிக்கல், பெரியகல்லார், சோலையார் டேம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி, சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை மூத்தவல்லி ஜமாலுதீன், கவுரவத்தலைவர் அமீது, தலைவர் அப்துல்காதர், செயலாளர் பசீர்அகம்மது ஆகியோர் செய்திருந்தனர்.