புத்தகளூர் கோயிலில் லிங்கத்தின் மீது பாம்பு சட்டை: பக்தர்கள் பரவசம்!
திருவாரூர்: நன்னிலத்தை அடுத்த புத்தகளூர் கிராமத்தில் அமைந்துள்ளது பரமசுந்தரர் கோயில். இத்தலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகை என்ற மகாமுனிவர் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். சில நாட்களில் அவரைசுற்றி புற்றுகள் சூழ்ந்தது. அவரது கை மட்டும் இந்த சிவனை (ஸ்ரீ பரமசுந்தரர்) நோக்கியே இருந்தது. ஓம் நமச்சிவாய என்ற ஒலி மட்டும் வந்ததாகவும், அவருடைய தவ வலிமையை மெச்சிய சிவன் அவருக்கு தரிசனம் தந்து, இங்கு எழுந்தருளினார் என்றும் கூறப்படுகிறது. எம்பெருமான் இம்முனிவருக்கு காட்சி அளித்ததால் இந்த ஊர் திருப்புத்தகை என்றும் நாளடைவில் புத்தகளூர் என மருவி வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் இந்த ஊரில் நிறைய பாம்புகளும், பாம்பு புற்றுகளும் காணப்படுகின்றன. பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. கோயிலின் அருகே நிறைய புற்றுகள், பாம்புகள் இருப்பதாலும், செவ்வாய், வெள்ளி பாம்புக்கு பால் ஊற்ற ராகு, கேது, நாக தோஷம் போகும் என்கின்றனர். இது ராகு, கேதுவிற்குரிய பரிகாரஸ்தலங்களில் ஒன்றாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் நேற்று (7ம் தேதி) பிற்பகல் 12 மணியளவில் உச்சி கால பூஜை செய்வதற்காக செய்ய குருக்கள் கதவைத் திறந்த போது, லிங்கத்தின் மீது பாம்பு ஒன்று ஏறி அதன் சட்டையை உறித்துச் சென்றிருப்பதை கண்டு குருக்கள் ஆச்சரியமடைந்தார். இதைக்கண்ட ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.