106 கோயில் திருப்பணிகளுக்கு ரூ.5.5 கோடி!
சுசீந்திரம் : கன்னியாகுமரி மாவட்ட தேவஸம் போர்டுக்கு உட்பட்ட 106 கோயில்களில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் வரும் ஆண்டில் மகா கும்பாபிஷேக விழா களைகட்ட தொடங்கிவிடும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோயில்கள் பெரும்பாலும் சுசீந்திரத்தில் இயங்கிவரும் தேவஸம்போர்டு அலுவலகத்தின் கீழ் உள்ளன. இணை ஆணையர் அந்தஸ்திலுள்ள இந்த அலுவலகம் தற்போது கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அலுவலகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை ஆகியவை சேர்த்து ஐந்து திருக்கோயில் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இதன்கீழ் 499 கோயில்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கோயில்கள் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த கோயில்கள் கண்டறியப்பட்டு திருப்பணிகள் செய்து மகாகும்பாபிகேம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் பல முக்கியமான கோயில்களில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் திருப்பணிகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 12 ஆண்டுகளை கடந்த கோயில்களில் மகாகும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மற்றும் திருக்குளங்கள் திருப்பணி, திருத்தேர் திருப்பணி, அடிப்படை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகள் என வேலைகள் பிரிக்கப்பட்டு அதற்கான எஸ்டிமேட்கள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பபட்டன. தற்போது அரசிடம் சமர்பிக்க்ப்பட்ட அனைத்து பணிகளையம் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றரைகோடி ரூபாய் செலவில் 106 திருக்கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணி வேலையும், சுசீந்திரம் கோயிலில் 2 8லட்ச ரூபாய் செலவில் சுற்றுபிரகாரம் கருங்கல் தளம் அமைக்கும் பணியும், 40லட்ச ரூபாய் செலவில் குளம் தூர்வாரும் பணியும் நடக்கிறது. மேலும் கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் கோயில் ராஜகோபுரம் திருப்பணி 90 லட்சத்திலும், சுசீந்திரம், தெரிசனம்கோப்பு, பறக்கை கோயில்களிலுள்ள திருத்தேர்கள் 10 லட்ச ரூபாய் செலவில் புதுபிக்கும் பணியும், வெள்ளிமலை கோயிலில் 19 லட்ச ரூபாய் செலவில் அன்னதான கூடம் கட்டுதலும், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் 10 லட்ச ரூபாய் செலவில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டுதலும், மண்டைக்காடு, சுசீந்திரம், கன்னியாகுமரி, நாகராஜா கோயில் மற்றும் குமாரகோயிலில் 25 லட்ச ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அலுவலக இணை ஆணையர் ஞானசேகர் கூறும்போது: திருக்கோயில்கள் அலுவலகத்தின் கீழ் உள்ள பெரும்பாலான கோயில்களில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட உள்ளன. தற்போதும் பல திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. 106 கோயிலகளில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிகே திருப்பணி, திருக்குளத்திருப்பணி, திருத்தேர் திருப்பணி, அடிப்படை வசதி என வேலைகள் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதனடிப்படையில் திருக்கோயில்கள் மற்றும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் மற்றும் மேல்நிலைத்தொட்டி போன்றவையும் கட்டப்படுகின்றன. என அவர் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் அதிகமான கோயில்களில் ஒரே நேரத்தில் திருப்பணி வேலைகள் நடைபெறுவது முதல் முறையாவதால் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கோயில்களில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் காண கோயில்கள் தயாராகி விடும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற மொழியின் அடிப்படையில் இனி கோயில் உள்ள ஊர்கள் கோயிலுடன் சேர்ந்து மேள தாளங்களுடன் களை கட்ட துவங்கி விடும்.