உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில் கும்பாபிஷேகம்

பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில் கும்பாபிஷேகம்

பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடக்கிறது. மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் பரமக்குடி வைகை நதிக்கரையில் திருநாவுக்கரசர் பாடியருளிய இக்கோயில் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் பரமக்குடி வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. கடம்ப மரத்தின் கீழ் சுயம்புவாக உருவாகிய இக்கோயிலில் 1945 ம் ஆண்டு ஜன., 19 ல் ஆயிர வைசிய மஞ்சப்புத்துõர் செட்டியார்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் 1958 டிச.,14 ல் ராஜகோபுரம், சுவாமி சந்நதிகள் உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தான திருப்பணிகளுக்கு பின் 1966 ஜூன் 5 ல் நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம், ராமநாதபுரம் மன்னர் நாகநாத சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆயிர வைசிய சமூக நலச்சங்கம் பொறுப்பேற்ற பின் இக்கோயிலில் 1998 நவ. 29 ல் மகா அபிஷேகம் நடந்தது. இதன்பின் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பரமக்குடி மக்களை வாட்டி வதைத்த வறட்சி நீங்கி மழை பொழிவதற்காக 2014 ல் திருவண்ணாமலை தவத்திரு தாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அன்றைய தினம் மழை கொட்டித்தீர்த்தது குறிப்பிட தக்கதாகும். தற்போது மீண்டும் ஆயிர வைசிய சமூக நலச்சங்கத்தின் முயற்சியால் மீனாட்சி அம்மன் சந்நதி முன்பு புதிய ஷோபசி மண்டபம், வடக்கு வாசல், ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், சோமசுந்தரேஸ்வரர் தீர்த்தகுளம் புதுப்பிக்கபட்டுள்ளது. கோயில் கொடி மரத்திற்கு தங்க கவசம், நத்திக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 6 ம் தேதி துவங்கி தொடர்ந்து நடக்கிறது.இன்று 6ம் கால யாகபூஜைகள் நிறைவடைந்த பின் சரியாக காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபை, ஆயிரவைசிய சமூக நலச்சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !