உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலரின் தகவல் அடிப்படையில் பக்தர்களை மீட்க நடவடிக்கை: தமிழக அரசு!

தினமலரின் தகவல் அடிப்படையில் பக்தர்களை மீட்க நடவடிக்கை: தமிழக அரசு!

ஸ்ரீநகர்: எங்கும் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் எங்களை மீட்க உதவி செய்யுமாறும் காஷ்மீரில் தவிக்கும் தமிழக அமர்நாத் யாத்ரீகர்கள் தினமலர் இணைய தளத்திற்கு போன் செய்து தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்ததில் அங்கு அசாதரண சூழல் நிலவுகிறது. உள்ளூர் மக்களை விட வெளி மாநிலத்தில் இருந்து அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பலர் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து சென்ற சுமார் 5 ஆயிரம் பேர் ஸ்ரீநகர் ராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் யாத்திரையை தொடர முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக பக்தர்கள் தினமலர் இணையதளத்திற்கு போன் செய்து தங்களின் இன்னல்களை தெரிவித்தனர். இது குறித்து கரூரில் இருந்து சென்ற பக்தர்கள் கூறுகையில்: நாங்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். யாத்திரையை தொடர கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் இன்றி தவிக்கிறோம். தமிழகம் திரும்ப வழி வகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காஷ்மீரில் தவிக்கும் யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் வகையில் தினமலர் இணையதளம் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தனிப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில் " இதுவரை காஷ்மீரில் தமிழர்கள் தவிப்பு குறித்த தகவல் எதுவும் வரவில்லை. யாத்ரீகர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !