ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மேலும் 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு கடந்த ஜூலை 1ல் வந்த கடிதத்தில் ஆண்டாள்கோயிலில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஒரு டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஆண்டாள் கோயிலின் முக்கிய பகுதிகள், மாடவீதிகள், ராஜகோபுரம், தங்ககோபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் எஸ்.பி.,(பொறுப்பு) விஜயேந்திரபிதரி கோயிலில் ஆய்வு செய்தார். கோயிலின் கிழக்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் என 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர் பொருத்த உத்தரவிட்டார். ஏற்கனவே இரு இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் உள்ள நிலையில், நேற்று மேலும் மூன்று இடங்களில் மெட்டல் டிடெக்டர் பொருத்தும்பணி துவங்கியது. முக்கிய நபர்களின் வாகனங்கள் மட்டுமே ஆண்டாள் ஆடிப்பூரகொட்டகை வரை அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் மாடவீதிகள், ரதவீதிகளில் நிறுத்தப்படுகின்றன.
13 நாளில் 3 மிரட்டல் : இந்த ஆண்டு ஜூன் 29 , ஜூலை 1 தேதிகளில் இரு மிரட்டல் கடிதங்கள், விருதுநகர் போலீசாருக்கு வந்துள்ளன. இதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துார், மற்றொன்று விருதுநகர் சூலக்கரையில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருந்தபோதிலும் கோயிலின் பாதுகாப்பை அதிகபடுத்தி, மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு 3வது முறையாக ஒரு மிரட்டல் கடிதம் போலீஸ்துறைக்கு வந்துள்ளது. அவர்கள் விசாரணையை ரகசியமாக நடத்தி வருகின்றனர்.