தையூர் சிவன் கோவிலில் கொள்ளை முயற்சி
தையூர்: தையூர், மரகதாம்பிகை முருகீஸ்வரர் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தனர். கேளம்பாக்கம் அடுத்த தையூரில், மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், கோவில் கதவுகளின் பூட்டுகளை உடைத்து, மின்சார ஒயர்களை துண்டித்து, கருவறையில் உள்ள ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கருவறையில் நுழையும் போது, பேட்டரியில் இயங்கக்கூடிய, ‘அலாரம்’ ஒலி எழுப்பியுள்ளது. இதை கேட்ட உள்ளூர்வாசிகள் கோவிலை சுற்றி குவிந்தனர். அலாரம் ஒலித்ததும், கோவிலின் உள்ளே இருந்த மர்ம நபர்கள், வெளியே தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை முயற்சியை அடுத்து, நேற்று பகலில், கோவிலின், 16 ஐம்பொன் சிலைகள், கோவில் செயல் அலுவலர் மற்றும் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் முன்னிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. கொள்ளை முயற்சி குறித்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த கோவிலில் காவலர்கள் கிடையாது என்பதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.