ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
ADDED :3409 days ago
சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை (15ம் தேதி) மாலை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளும் இருக்கும். கேரளா, பத்தனம் திட்டா மாவட்டத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில், மாதந்தோறும் மாத பூஜைகளுக்காகவும், உற்சவங்களுக்காகவும் திறக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு, ஆடி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை நாளை (15ம் தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, மறுநாள் (16ம் தேதி) காலை, கணபதி ஹோமத்துடன், வழக்கமான பூஜைகள் துவங்கும். வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளான சகஸ்ரகலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை இடம்பெறும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, 20ம் தேதி இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்படும்.