விசேஷமான நாளாக உருவாகி உள்ள ஆக., 2!
குரு பெயர்ச்சி, ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கு என, மூன்று விசேஷங்களும், ஒரே நாளில் வருவதால், ஆக., 2ம் தேதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை வருவது இயல்பு. அவற்றில் ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சிவாலயங்களுக்கு சென்று, சிவனை வழிபடுவர். சதுரகிரி மலை, ராமேஸ்வரம், அழகர் கோவில் போன்றவற்றில் பக்தர்கள் குவிவர். அன்று முன்னோருக்கு, தர்ப்பணம் செய்வர். அத்தகைய ஆடி அமாவாசை, ஆக., 2ம் தேதி வருகிறது.அன்றைய தினமே, ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய, ஆடி, 18ம் பெருக்கு தினமும் வருகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப, இந்த நாளில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளின் முன் அல்லது பின்புறம் உள்ள காலி இடங்களில், விதை போட்டு, வீட்டு தோட்டம் போடுவர்; விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.
அன்றைய தினம், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், காவிரிக்கரையில் கூடி சிறப்பு வழிபாடு நடத்துவர். புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள், மாங்கல்யத்தை மாற்றி கட்டுவர். அன்று சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு, தீர்த்த உற்சவம் நடைபெறுவது தனி சிறப்பு. அத்துடன், சாமியாடிகள் மற்றும் பக்தர்கள், அழகர் கோவில் மலை மீது உள்ள நுாபுர கங்கையில் தீர்த்தமாடி, வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வர். அதேபோல், ஆண்டுக்கு, ஒரு முறை குரு பெயர்ச்சி நடக்கிறது. இந்த நல்ல நாளில், குரு பகவான் பார்வை கிடைத்தால், கோடி நன்மை கிடைக்கும் என்பது, ஆன்மிகவாதிகள் நம்பிக்கை. அத்தகைய குரு பெயர்ச்சி, ஆக., 2ல் நடக்கிறது. அன்றைய தினம் குரு பகவான் கோவில்களுக்கு சென்று, பக்தர்கள் குரு பகவானை வழிபடுவர். இவ்வாறு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குரு பெயர்ச்சி என, மூன்று விசேஷங்களும், ஒரே நாளில் வருவது, மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. மூன்று விசேஷங்களும், முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே, அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது. - நமது நிருபர் -