திருத்தணி கோவிலில் பாலூட்டும் அறை திறப்பு!
திருத்தணி;முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக தாய்மார்கள் பாலுாட்டும் அறையை நேற்று கோவில் தக்கார் திறந்து வைத்தார். திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பெண் பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் மலைக்கோவிலுக்கு வருகின்றனர். அங்கு குழந்தைக்கு பாலுாட்டுவதற்கு தனியாக அறை வசதியில்லாததால், பெண் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கோவில் தக்கார் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில், 50 ஆயிரம் மதிப்பீட்டில், மலைக்கோவிலில், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை நிலையம் அருகில், புதியதாக தாய்மார்கள் பாலுாட்டும் அறை ஏற்படுத்தினர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், தக்கார் ஜெய்சங்கர் பாலுாட்டும் அறையை திறந்து வைத்து கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்களின் பயன்பாட்டிற்கு விட்டார். தமிழகத்திலேயே திருத்தணி முருகன் கோவிலில் மட்டுமே தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி யில் கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) தனபாலன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.