குச்சனூர் கோயில் ஆடி சனிவார விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்களின் தரிசனத்திற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேனிமாவட்டம் குச்சனுார் சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சனிதிசை நடப்பவர்கள் இங்கு எள் விளக்கேற்றி வழிபட்டால், சனிப்பார்வையின் உக்கிரம் குறையும் என்பது ஐதீகம். ஆடியில் 5 சனிவார திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் சுவாமியை தரிசிக்க மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். இன்று (ஜூலை 16 ) காலை 10 மணிக்கு தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, கொடியேற்ற விழா துவங்கியது . உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத், முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் மூலவர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சிறப்பு பஸ்கள் : பக்தர்கள் வசதிக்காக தேவாரம், போடி, கம்பம், தேனியில் இருந்து குச்சனுாருக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. பேரூராட்சி சார்பில் தற்காலிக பெண்கள் சுகாதார வளாகம், உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சுரபி நதியில் நீராடும் பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி எள் விளக்கு ஏற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாசடைந்து கிடந்த சுரபி நதியில் பக்தர்களின் ஆடைகள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டன. கோயில் வளாகம், நுழைவு பகுதி, மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.