விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் வட மாநிலத்தவர்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் நினைவகம் எதிரே, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட,50 பேர் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள்கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி பண்டிகை யில், சிலை வைத்து வழிபடுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளதால், சிலைகள் நன்றாக விற்பனையாகின்றன. இதனால், விநாயகர் சதுர்த்தி துவங்குவதற்கு மூன்று மாதங்கள் முன்பே, ஸ்ரீபெரும்புதுார் வந்து பகல் முழுவதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில்ஈடுபடுவோம். இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதுார் வருகிறோம். ஆண்டுக்கு ஆண்டு சிலைகள் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கிறது. சிலைகளை விற்றதும்ராஜஸ்தானுக்கே சென்று அங்கு விவசாய பணியில் ஈடுபடுவோம். மொழியை விட, எங்களிடம் விடாப்பிடியாக மிக குறைந்த விலைக்கு பேரம் பேசுபவர்களே எங்களுக்குபிரச்னையாக திகழ்கின்றனர். தற்போது தமிழில் ஓரளவு நன்றாக பேசுகிறோம். எங்களிடம் விநாயகர் சிலை வாங்கி செல்லும் சிலர் சென்னையில் விற்பனை செய்கின்றனர். தேங்காய் நார், மாவு, மண்ணை பயன்படுத்தி, 1 அடி முதல், 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளைதயாரிக்கிறோம். 10 அடி உயர சிலையை செய்ய, ஐந்து நாட்களாகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.