அன்னுார் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
அன்னுார் : கரப்பாளையம்புதுார் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கரப்பாளையம்புதுார், செல்வ விநாயகர் கோவிலில், அரசமரத்தடி பிள்ளையார், தென்முக கடவுள், அண்ணாமலையார், துர்க்கையம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா முதல்நாள் மாலை தீர்த்தம் எடுத்து வருதலுடன் துவங்கியது. இரவு 108 திருவிளக்கு வழிபாடு, ஐம்பூத வழிபாடு, வேள்வி பூஜை நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு இறைத் திருமேனிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 9:30 மணிக்கு பிள்ளையார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம், தச தரிசனம் நடந்தது. அவிநாசி வாகிசர் மடம் ஏகாம்பரநாத சாமிகள், அரங்கசாமி அருளுரை வழங்கினர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.