உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி நல்லாங்குளத்தில் தடுப்பு வேலி!

திருத்தணி நல்லாங்குளத்தில் தடுப்பு வேலி!

திருத்தணி: நல்லாங்குளத்தில்,  பக்தர்கள் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில், தடுப்புவேலி அமைத்து,  குழாய்கள் அமைக்கும்  பணியை, திருத்தணி நகராட்சி மேற்கொண்டுள்ளது. திருத்தணி  முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப  திருவிழா,  வரும், 28ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவிற்கு,  தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில்  இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள்  காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர். அந்த வகையில், பெங்களூரு, வேலுார்,  ஆற்காடு,  திருவண்ணாமலை, சித்துார், கிருஷ்ணகிரி, சோளிங்கர் மற்றும்  பள்ளிப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து,  பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள், மேல் திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் வழியாக, மலைக்கோவிலுக்கு  செல்வர்.  காவடிகளுடன்  வரும் பக்தர்கள் மொட்டை அடித்து, நல்லாங்குளத்தில்  புனித நீராடிய பின், காவடிகளுக்கு பூஜை செய்து கோவிலுக்கு செல்வர்.

குளத்தில் பக்தர்கள் இறங்கி குளிப்பதால், ஆண்டுதோறும் உயிரிழப்பு  ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம்,  குளத்தில்,  தடுப்பு வேலி அமைத்து, பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக குழாய் அமைக்க  தீர்மானித்து பணிகள் தற்போது துரித  வேகத்தில் நடந்து வருகின்றன.  இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘நகராட்சி பொது நிதியில்  இருந்து, 5 லட்சம்  ரூபாய் செலவில், நல்லாங்குளத்தில் படிகளில் தடுப்பு வேலி  அமைக்கப்படும். தடுப்பு வேலி பக்கத்தில், குளத்தை சுற்றி, 300க்கும்   மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்படும்’ என்றார். மேலும், ‘பக்தர்கள் குளத்தில் இறங்காமல்,  குழாய்களில் குளிக்கும் வசதி  செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை ஒரு  வாரத்தில் முடிக்கவும் திட்டமிட்டு பணிகள் துரித வேகத்தில் நடந்து  வருகின்றன’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !