கோவிந்தா கோஷம் முழங்க.. அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க ஆடி, சுந்தரராஜ பெருமாள் தேர் அசைந்து வலம் வந்தது.
இக்கோயில் ஆடித் திருவிழா, ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அன்ன வாகனத்தில் புறப்பட்டார் பெருமாள். தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அனுமார், கருடன், சேஷம், குதிரை வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளிய பெருமாள் கோயிலை வலம் வந்தார். முக்கிய விழாவான தேரோட்டம் காலை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு ஆராதனைகள் நடந்தன. காலை 8.30 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்தது. நாட்டார்கள் வெண் கொடி வீச பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி, அசைந்து வலம் வந்த தேர் காலை 10.45 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. கலெக்டர் வீரராகவ ராவ், தென் மண்டல ஐ.ஜி., முருகன், தலைமையிடத்து துணை கமிஷனர் ராஜராஜன், தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணியாளர்கள் செய்திருந்தனர்.